தேசப்பிதாவை கொன்றொழித்த இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுதந்திர இந்தியா பிறப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் மகாத்மா காந்தி. அஹிம்சை, அறவழியை உலகிற்கு போதித்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய வளாகத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருங்காட்சிய வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!

மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.

நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி!” என்று தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version