ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பாக உதயகுமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஜிபி அலுவலக வாசலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், புரட்சித் தமிழகம் கட்சியை சேர்ந்த ஏர்போர்ட் மூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது
பின்னர் ஏர்போர்ட் மூர்த்தி கத்தி வைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் கத்தியை வைத்து தாக்கிய ஏர்போர்ட் மூர்த்தியை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வழக்கறிஞர்கள் சார்பில் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும் என்றும், மேலும் ஒரு வருட காலம் அவர் வெளியே வராதபடி சிறையில் அடைக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.