எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம், உசிலம்பட்டி தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்காமல் திமுகவே போட்டியிட வேண்டும் என்று அந்த தொகுதியைச் சேர்ந்தவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி உள்ளனர்.
234 தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் திமுக நிர்வாகிகளின் கருத்துகளை அவர் கேட்டறிந்து வருகிறார்.
அந்தவகையில் இன்றைய தினம் நடைபெற்ற ஆலோசனையில் சிதம்பரம், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் இந்தமுறை தங்கள் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கக் கூடாது என்றும் திமுகவே களமிறங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கடந்த 2021 தேர்தலில் உசிலம்பட்டி தொகுதி திமுக கூட்டணியைச் சேர்ந்த பார்வர்டு பிளாக் கட்சிக்கும், சிதம்பரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இரைண்டு இடங்களிலும் அந்த கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர். திமுகவினர் களமிறங்கினால் வெற்றி உறுதி என்று அந்த தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி உள்ளனராம்.
இதுபற்றி பரிசீலிப்பதாக கூறிய முதலமைச்சர், நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்ததோடு பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் நிர்வாகிகள் கொண்டு செல்ல வேண்டும் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உடன்பிறப்பே வா என்ற தொகுதிவாரியான அடுத்த சந்திப்பு வரும் 17,18,19,20 ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது.