பாமகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே கூட்டணி வைப்பதிலும், நிர்வாகிகளை நியமிப்பதிலும் ஏற்பட்ட மனக்கசப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இது நான் ஆரம்பித்த கட்சி நான் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என்றக் கொள்கையில் ராமதாஸ் இருந்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி மறுபுறம் பல முடிவுகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாகிகள் பலர் டாக்டர் ராமதாஸை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதேப் போல அன்புமணி புதிதாக பனையூரில் ஆரம்பித்துள்ள அலுவலகத்திலும் நாள்தோறும் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. அன்புமணிக்கு ஆதரவாக இருக்கும் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் பலரை நீக்கிவிட்டு டாக்டர் ராமதாஸ் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். பழையை நிர்வாகிகள் அவரவர் பதிவியிலேயே நீடிப்பார்கள் என அன்புமணி மறுபுறம் கூறி வருகிறார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம்(12.06.2025) செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், 2026-ம் ஆண்டு தேர்தல் வரை நான் தான் தலைவராக இருப்பேன், அதன் பிறகு வேண்டுமானால் அன்புமணி இருந்துக் கொள்ளட்டும் என கூறியிருந்தார். பிறகு நேற்று (13.06.2026) அதிரடியாக என் உயிர் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவராக இருப்பேன் என்றார். அத்தோடு அன்புமணி மீது பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். இப்படியிருக்க, புதிதாக நியமித்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களுடன் ராமதாஸ் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் தற்போதைய பாமக பொதுச்செயலாளரான வடிவேல் ராவணனை மாற்றி புதிய நபரை தேர்வு செய்ய வாய்ப்பிருப்பதகவும் தகவல் வெளியாகியுள்ளது.