பொதுவாக அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள் தொண்டர்களின் செயல்களால் மேடைகளிலேயே கோபப்படுவது வழக்கம். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் மேடையில் ரசிகரிடம் கோபப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தவர் கமல்ஹாசன். 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் களம்கண்டு, 15 லட்சம் வாக்குகளை பெற்றது. தொடந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்ட கமல் கோவை தெற்கு தொகுதியில் 1728வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தொடர்ந்து கட்சியில் இருந்து முக்கிய தலைகள் விலகியதால், கட்சி சரியத் தொடங்கியது. கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்றார். இதனால் இவர் காங்கிரஸ் உடன் கை கோர்க்க போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணிக்காக பிரசாரம் செய்தார்.
அந்த தேர்தலின்போது மக்கள் நீதி மய்யத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராக ஒரு இடம் வழங்கப்படும் என கூட்டணியின் தலைமையில் இருந்த திமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் கமல்ஹாசன். மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பு மனு தாக்கலின் போது பேனா கூட எடுத்துச் செல்லாத இவரது வீடியோ இணையத்தில் பேசுபொருளானது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று (14.06.2026) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் வாள் ஒன்றோடு மேடைக்கு சென்று கமல்ஹாசனிடம் கொடுக்க முற்பட்டார். அதனை மறுத்த கமல்ஹாசன், நிர்வாகிகளை கடிந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.