பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யாவின் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நடிகர் ஆர்யா, திரைப்படங்களில் நடிப்பதோடு கடந்த சில வருடங்களாக ’சீ ஷெல்’ (SEA SHELL) என்ற உணவகங்களை நடத்தி வருகிறார். சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும், தமிழ்நாட்டில் 25-க்கும் மேற்பட்ட கிளைகளாகவும் இது செயல்பட்டு வருகிறது. கேரளாவிலும் சீ ஷெல் உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் செயல்பட்டு வந்த கிளையை ’குன்ஹி மூசா’ என்பவருக்கு நடிகர் ஆர்யா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதில் வரி ஏய்ப்பு நடந்ததாக கேரள வருமானவரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையில் உள்ள சீ ஷெல் உணவங்களிலும் சோதனை நடத்த அவர்கள் திட்டமிட்டனர்.
இதையடுத்து கேரள அதிகாரிகள் வேண்டுகோளை ஏற்று தமிழக வருமானவரித்துறையினர் இன்று(18.06.2025) காலை முதல் நடிகர் ஆர்யாவின் வீடு மற்றும் சீ ஷெல் உணவங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டை பின்னி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடிகர் ஆர்யா வசித்து வருகிறார். காலை 6 மணிக்கு அங்கு சென்ற 5-க்கும் மேற்பட்ட வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று அண்ணாநகர், வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் சீ ஷெல் உணவகங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் யாரும் வராதநிலையில் மேலாளர்களை அழைத்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனையின் முடிவில் தான் நடிகர் ஆர்யா வரிஏய்ப்பு செய்துள்ளாரா என்பது தெரியவரும்.