சென்னை மாநகர் முழுவதும் மாணவர்கள் ரகளை மற்றும் மோதலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து மொத்தமாக 257 இடங்களில் போலீசார் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அண்ணாநகர் பகுதியில் மாணவர்கள் ஒன்று திரண்டு அங்கிருந்து தாங்கள் செல்லக்கூடிய இடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இதையொட்டி அண்ணா நகர் பகுதி முழுவதும் அதிக அளவில் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
இதேபோன்று கீழ்ப்பாக்கம்,மெரினா கடற்கரை,நந்தனம் சைதாப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் உத்தரவின் பெயரில் காவலர் ஒருவர் பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் கையில் லத்தியுடன் கண்காணித்து வருகிறார். மாணவர்கள் ஒன்று கூடி மோதலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரெயில் நிலையங்கள்
இதேபோன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் திருவள்ளூர் ஆவடி, உள்ளிட்ட புறநகர் ரயில் நிலையங்கள் அனைத்திலும் ரயில்வே போலீசாரும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் மாணவர்கள் நடைமேடைகளில் ஒன்று திரண்டு ரகளை ஈடுபடுவதை தடுக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இதுபோன்று ரகளையில் ஈடுபடும் மாணவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் வேதனை தெரிவித்தார். இதை
தொடர்ந்து அதுபோன்ற மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.