திமுகவின் தேர்தல் வாக்குறுதியான கல்வி கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை நடந்த பல்வேறு தேர்தல்களில் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டி திருப்பூரை சேர்ந்த மணிமாறன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அளித்த கல்வி கடன் ரத்து என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் மாணவர்கள் வழக்குகளை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகள் பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் வழங்குவதை தடுக்க விதிகளை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், கல்விக்கடன் பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பான திட்டத்தை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும், கல்வி கடன் தள்ளுபடி வாக்குறுதியை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கைகள் முன்வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம், மற்றும் நீதிபதி சுந்தரமூகன் அமர்வு, இதுபோன்ற உத்தரவை எப்படி பிறப்பிக்க முடியும் என மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.