மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையானது, முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா, சமண சிற்பங்கள் என மதநல்லிணக்கத்துக்கு சான்றான தளமாக விளங்குகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தர்காவுக்கு ஆடு, கோழியை பலியிட சென்ற இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
திருப்பரங்குன்றம் மலை இந்துகளுக்கு சொந்தமானது, அங்கு ஆடு, கோழிகளை பலியிடக் கூடாது என பாஜக உட்பட இந்து அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்தன. தொடர்ந்து இந்தாண்டு தொடக்கத்தில் திருப்பரங்குன்றதிற்கு சென்ற எம்.பி நவாஸ்கனி மலைப் படிக்கட்டுகளில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டதும் சர்ச்சையானது. மறுபுறம் தொல்லியல் துறை மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தில் நெற்றியில் வைக்கப்பட்ட விபூதியை அழித்து விட்டு விசிக தலைவர் திருமாவளவன் மக்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது பேசுபொருளாக மாறியுள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்செய்தார். அப்போது கோயிலுக்கு வந்த தம்பதியினர் திருமாவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முற்பட்டனர். அப்போது தனது நெற்றியில் வைக்கப்பட்ட விபூதியை அழித்துவிட்டு, திருமா செல்ஃபி எடுத்துக் கொண்டார்.