போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கொகைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆப்ரிக்க நாடான கயானாவை சேர்ந்த ஜான் என்பவர் பிரதீப் குமாருக்கு கொகைன் விற்பனை செய்தது தெரியவந்தது. ஒசூரில் வைத்து ஜானை கைது செய்த போலீசார், சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர் அளித்த பட்டியலில் நடிகர் ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார். இதனையடுத்து நேற்று (23.05.2025) ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என ஸ்ரீகாந்த் வாதம் செய்துள்ளார். சந்தேகத்தின் பேரில், சாலிகிராமத்தில் உள்ள ஸ்ரீகாந்தின் வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் எவ்வித போதைப் பொருளும் சிக்கவில்லை.
ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட போது, அதில் அவர் போதைப் பொருள் எடுத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தி 45 நாட்கள் வரை மருத்துவ பரிசோதனையில் கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில், ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார், கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் போதைப் பொருள் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து நேற்று இரவு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், போதைப் பொருள் பயன்படுத்தி தவறு செய்து விட்டேன், மகனை கவனித்துக் கொள்ள வேண்டும், குடும்பத்தில் பிரச்னை நிலவுவதால் ஜாமின் கோரினார். மேலும் வெளிநாடு எங்கும் செல்ல மாட்டேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவேன் என்றும் கூறினார். இங்கு ஜாமின் கோர முடியாது, என்.டி.பி.எஸ் சிறப்பு நீதிமன்றத்தில் தான் ஜாமின் பெற முடியும் எனக் கூறிய நீதிபதி, ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் ஸ்ரீகாந்த் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்துடன் சேர்ந்து போதைப் பொருள் பயன்படுத்திவர்கள் குறித்து விசாரிக்க அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.