ஆன்லைன் முதலீட்டு மோசடியில் பொதுமக்களை ஏமாற்றியதாக, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீவ் (26) என்ற நபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கோவை, சிங்காநல்லூர், திருச்சி சாலை பகுதியைச் சேர்ந்த பூர்வா அமிதி என்பவர், ஃபேஸ்புக்கில் ஒரு முதலீட்டு விளம்பரத்தைப் பார்த்து, அதில் குறிப்பிடப்பட்டிருந்த வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொண்டிருக்கிறார். மோசடி நபர்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் பேசியுள்ளனர். இதை நம்பிய பூர்வா அமிதி, பல்வேறு கட்டங்களாக மொத்தம் ரூ.4,19,000 பணத்தை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். நீண்ட நாட்களாகியும் லாபமோ, முதலீடு செய்த பணமோ திரும்பக் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஈரோடு மாவட்டம் சங்கரபாளையத்தைச் சேர்ந்த பிரதீவ் (26) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்கள், இரண்டு சிம் கார்டுகள், ஒரு வங்கி பாஸ்புக் மற்றும் மூன்று டெபிட் கார்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட பிரதீவ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடியில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.