திருப்புவனம் அஜித் குமார் லாக்கப் மரணம் என்பது அப்பட்டமான கொலை என்றும் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான இன்பதுரை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருடியதாக போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிமுக எம்.பி. இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருபுவனம் மரணம் என்பது அப்பட்டமான கொலை இந்த கொலைக்கு காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தது யார் என்பதுதான் எங்களுடைய கேள்வி.
ஒருவரை கைது செய்தாலோ அல்லது விசாரணைக்கு அழைத்து சென்றாலோ எஃப் ஐ ஆர் போட்டு இருக்க வேண்டும் ஏன் போடவில்லை 24 மணி நேரம் கடந்தும் ஏன் எஃப் ஐ ஆர் போடவில்லை. சாத்தான்குளம் லாக்கப் மரணத்தில் முறையான நடவடிக்கையை நாங்கள் எடுத்தோம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டோம் ஆனால் சாத்தான்குளம் மரணத்திற்காக போராட்டத்தில் குதித்தவர்கள் தற்போது எங்கே போனார்கள் என்பதுதான் எங்களுடைய கேள்வி.
சிபிஐ விசாரணை வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். நல்ல அரசாங்கம் இல்லை. அதனால் தான் இம்மாதிரி காவல்துறையின் செயல்பாடுகள் உள்ளது. செயலிழந்த அரசு இருந்தால் காவல்துறையின் கை ஓங்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றார்.
மாநில மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டுள்ளது என்பது இருக்கட்டும் ஆனால் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை என்பது தானே நிதர்சனம் என்றும் இன்பதுரை குறிப்பிட்டார்.
