திருவண்ணாமலையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் பள்ளி மாணவன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் இருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை நகர எல்லைக்கு உட்பட்ட தாமரை நகர் கோரிமேடு 5-வது தெருவில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை பார்ப்பதற்காக தேனி மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கோட்டை முத்து என்பவர் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களும் அந்த இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு ஏற்பட்ட பிரச்சனையால் கோட்டை முத்து என்ற வாலிபர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் குத்தியதில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் சுனில்(16). என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கத்தியால் குத்திய இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த மாணவனும் , கத்தியால் குத்திய இளைஞனும் வெவ்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் போலீசார் அது குறித்து கைரேகங்களையும் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தியால் குத்தப்பட்ட மாணவர் சுனில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை நகர காவல் துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து எந்தத் தகவலும் வெளியே கசிய விடாமல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று திருவண்ணாமலை வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ராமு (31) ஆட்டோ ஓட்டுநர் இவரை நேற்று இரவு காந்திநகர் மைதானம் அருகில் மர்ம கும்பல் ஒன்று கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து அப்பகுதியில் சிசிடிவி காட்சியின் அடிப்படையிலும் கிழக்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தொழில் போட்டி காரணமாக கட்டிட மேஸ்திரி ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் நேற்று இரவு பள்ளி மாணவன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் என இருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடக்காத நாட்களே இல்லை எனக் கூறிவரும் நிலையில் தற்பொழுது ஆன்மீக நகரமான திருவண்ணாமலைகொலை கொலைநகரமாக மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.