தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆகியோர் நேரில் வந்து இன்று மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 7ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
வருகிற 7 ஆம் தேதி முதல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சுற்றுப்பயணத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் மனு அளித்துள்ளோம். திருப்புவனம் விவகாரம் லாக்அப் மரணம் அல்ல. அது ஒரு படுகொலை என வெளிக்கொண்டு வந்தது அதிமுக தான். முதலமைச்சர் சாரி சொல்லிவிட்டால் போன உயிர் திரும்ப வந்து விடுமா?
அஜீத்குமாருக்கு முன் நிகழ்ந்த 24 லாக்கப் மரணங்களுக்கு சாரி சொன்னாரா? முதல்வர்… தேர்தல் வருவதால் தான் இந்த விவகாரத்தில் அவர் சாரி சொல்லி உள்ளார். லாக்கப் மரணங்களுக்கு பெயர் போன மாநிலமாக தமிழகம் திகழ்வது வேதனை அளிக்கிறது. ரத்தக்கறை படிந்த அரசாக, ரத்தக்கறை படிந்த முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் இருக்கும் நடிகர்கள் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை. நீதிமன்ற நடவடிக்கை காரணமாக தான் சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் எப்படி மாற்றுவார்கள். வெறும் சாரி மட்டும் சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது இந்த லாக்கப் மரணத்தை.
அஜீத்குமார் குடும்பத்தினரின் சாபம் 2026 தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஜனவரி வரை தான் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர். அதுவரையிலாவது மக்களை காப்பாற்றும் எண்ணம் ஸ்டாலினுக்கு இருக்குமா என்றால் அதுவும் இருக்காது. பாண்டிய மன்னன் நீதி தவறியதால் மதுரை பற்றி எரிந்தது. இன்று தமிழகமே பற்றி எரிகிறது. சாரி சொன்னால் போதுமா? பதவி விலகியிருக்க வேண்டாமா? இதன் பின்னணியில் மூன்று திமுகவினர் இருப்பதாக கூறப்படுகிறது. ஏன் அவர்களை விசாரிக்கவில்லை. சாத்தான்குளம் வழக்கில் CBI விசாரணை மேற்கொண்டு வருகிறது. இன்னமும் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.