மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இதன்ஒருபகுதியாக கோவையில் நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசும்போது கோயில்களில் உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கை என்பது கோயிலுக்கு சொந்தமானது, அதாவது இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று கூறியிருந்தார். மேலும் அந்த நிதியைக் கொண்டு கோயில்களைத் தான் மேம்படுத்த வேண்டுமே தவிர, அதனைக் கொண்டு கல்வி நிலையங்களை நடத்துவது தவறு என பொருள்பட பேசியிருந்தார். இந்த பேச்சு பெருவாரியான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரிகள் எவை எவை என்ற பட்டியலை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 6 கல்லூரிகள் இந்து சம அறநிலையத்துறையின் கீழ் இயங்குகிறது.
அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக்கல்லூரி, பழநி, திண்டுக்கல் மாவட்டம் – ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு – 1963
அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, பழநி, திண்டுக்கல் மாவட்டம் – ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1970
ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம் -1964 ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி, குழித்துறை, கன்னியாகுமரி மாவட்டம் -1963(ஆரம்ப ஆண்டு)
பூம்புகார் கல்லூரி, மேலையூர், நாகப்பட்டினம் மாவட்டம் -1964(ஆரம்ப ஆண்டு)
இவற்றில் 4 கல்லூரிகள் காமராஜர் காலத்திலும் மற்றும் 1 கல்லூரி கருணாநிதி ஆட்சிக்காலத்தில் திறக்கப்பட்டவை.
பழனி ஆண்டவர் தொழில்நுட்ப கல்லூரி – 1980 இல் MGR ஆரம்பித்து வைத்தார்.
60 வருடங்களாக பல்வேறு மக்களுக்கு படிக்கும் வாய்ப்பினை கொடுத்த கல்லூரிகள் இவை.
2021இல் அருள்மிகு கபாலீஸ்வரர் கல்லூரி திறக்கப்பட்டது, முழுக்க முழுக்க கபாலீஸ்வரர் கோவில் நிதி மற்றும் அறநிலையத்துறை நிதி கீழ் செயல்படுகிறது. அதற்குள்ளாகவே இப்படி ஒரு கருத்தை, அதுவும் காமராஜர் காலத்திலேயே இதெல்லாம் செய்து இருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் பேசுவது மிக மோசமான மனநிலை. தமிழ்நாட்டில் மட்டுமில்லை, ஆந்திரா திருப்பதியில் கூட திருப்பதி தேவஸ்தானம் மூலம் கல்லூரிகள் நடத்தப்படுகிறது.
அதிமுக – பாஜக கூட்டணி உருவானபோது அது தேர்தல் கூட்டணி தானே தவிர, கொள்கை கூட்டணி அல்ல என்று எடப்பாடி பழனிசாமி தெளிவுபட கூறியிருந்தார். ஆனால் இப்போது பாஜக – ஆர்எஸ்எஸ்-ன் கொள்கைகளை எடப்பாடி பழனிசாமி பேசுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்த கட்சி அதிமுக. சத்துணவில் முட்டை போடப்பட்டது எம்ஜிஆர் ஆட்சி காலத்தில்.. மாணவர்கள் இலவச மடிக்கணினிகளை பெற்றது ஜெயலலிதா ஆட்சி காலத்தில். இந்தவழியில் வந்த அதிமுக இப்போது கல்வியையும், கோயிலையும் முடிச்சுப் போட்டு பேசுவது ஏற்கத்தக்கதல்ல என்பது தமிழக மக்களின் கருத்து