மீனவர்களின் படகுகளில் கட்சிக் கொடியை அகற்ற முற்பட்டால் அனைத்து கொடியும் எடுக்க வேண்டும். அவர்களுக்கு அதிமுக கொடி பறக்கக்கூடாது.. தவெக கொடி பறக்கக்கூடாது. திமுக கொடி மட்டும் பறக்கலாமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள அழகுமுத்துக் கோன் சிலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் நிருபர்களிடம் கூறியதாவது :- எதற்கு வெண்ணெய் ஒரு கண்ணிலும் சுண்ணாம்பு ஒரு கண்ணில். எதற்கு பாகுபாடு. சட்டத்தின் முன் அனைவரும் சமம். கொடியை அகற்ற முற்பட்டால் அனைத்து கொடியும் எடுக்க வேண்டும். அவர்களுக்கு அதிமுக கொடி பறக்கக்கூடாது.. தவெக கொடி பறக்கக்கூடாது. திமுக கொடி மட்டும் பறக்கலாமா?
இவை அனைத்தையும் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள் தமிழர்கள். எந்த நிலையிலும் எப்படிப்பட்ட அடக்கு முறையாக இருந்தாலும் 2026 தேர்தலில் வெற்றி பெற போவது அதிமுக தான். அதிமுக தான் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. சட்டம் ஒழுங்கை சீர்செய்ய வேண்டிய தி.மு.க அரசு. இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை கூட சரியாக ஒருங்கிணைக்கவில்லை. எதிர்க்கட்சியை மதிக்காமல் தான் தோன்றித்தனமாக காவல்துறை செயல்பட்டு வருகிறது.
வைகோ மீது மிகுந்த மரியாதை உள்ளவன் நான். தனிப்பட்ட முறையில் அவரை எனக்கு பிடிக்கும். அவர் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். நன்றியை மறப்பது நன்றன்று. அவர் நன்றியை மறக்கக்கூடாது.
அதிமுகவால் தான் (ம.தி.மு.க) அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதையெல்லாம் மறந்துவிட்டு வாய் கூசாமல் ஒரு கட்சியை இழிவுபடுத்தி பேசுவது அவரது பண்புக்கு நல்லதல்ல. திமுகவை பற்றி வைகோ பேசாத பேச்சில்லை, வைக்காத விமர்சனம் இல்லை. திமுகவிடம் எதிர்பார்த்து, அதிமுகவை வைகோ குறைசொல்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
