கரூரில் மருத்துவமனை வளாகத்தில் புகுந்து மனைவியை குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த விஷ்ரூத் என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி ஸ்ருதிக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் தகராறு முற்றிய நிலையில், விஷ்ரூத் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ஸ்ருதி இரவோடு இரவாக குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று விடியற்காலை மனைவியை பார்க்க விஷ்ரூத் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிகிச்சையில் இருந்த ஸ்ருதியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ருதி அங்கேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து வெளியேறினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு தப்பியோடிய விஷ்ரூத்தினை தீவிரமாக தேடி வருகின்றனர்.
