மறைந்த சிவாஜி கணேசன் விட்டுச் சென்ற மூச்சுக் காற்றை தான் நாங்கள் சுவாசிக்கிறோம் என அவரது மகனும் நடிகருமான பிரபு கூறியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 24-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னையில் அவரது சிலைக்கு அவரது மகன் பிரபு மற்றும் பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் மரியாதை செலுத்தினர். அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
அதன் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபு மற்றும் சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பிறகு இருவரும் மணிமண்டபத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரபு, “சிவாஜி கணேசன் நம்மை விட்டுச் சென்று 24 வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் அவரது ரசிகர்களை பார்க்கும் போது அவர் நம்மோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என தோன்றுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் நடிகர் திலகத்தை குடும்ப நண்பர், சகோதரனாக இன்றும் பார்த்து வருகின்றனர். சிவாஜி உங்களது அனைவருடைய எண்ணங்களிலும் வாழ்ந்து வருகிறார். எனது தந்தை அனைவரையும் இதயங்கள் என்று தான் கூறுவார், அவர் இதயங்கள் அனைவருக்கும் நன்றி. அப்பா விட்டுச் சென்ற மூச்சுக்காற்றைதான் நாங்கள் சுவாசித்து வருகிறோம், அதுதான் இந்த ரசிகர்கள்” என தெரிவித்தார்.