”டகோயிட் : எ லவ் ஸ்டோரி” என்ற படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர், நடிகைக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு நடிகரான ஆதிவி சேஷ் கதாநாயகனாக நடிக்கும் ஆக்சன் கலந்த காதல் படம் டகோயிட் : எ லவ் ஸ்டோரி. இப்படத்தில் ஆதிவி சேஷூக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்தார். ஆனால் கூலி படப்பிடிப்பில் அவர் பிஸியாக இருந்ததால், இப்படத்திற்கு தேதி கொடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக இப்படத்தில் மிருனாள் தாகூர் நடித்து வருகிறார்.
தமிழ், இந்தி, மலையாளம் என 5 மொழிகளில் வரும் டிசம்பர் மாதம் 25-ம் தேதி படம் வெளியாகவுள்ளது. இதில் அனுராக் காஷ்யப், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்பட படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில், ஆத்வி சேஷூக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதேப் போல், மிருனாள் தாகூருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இருவரையும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.