முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தனருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே என்ன நடந்தது என்பதை, ஜகதீப் தன்கர் வெளிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 21ல், பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் துவங்கிய முதல் நாளே, குடியரசு துணை தலைவர் பதவியை ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்தார். ராஜ்யசபா தலைவராகவும் பதவி வகித்த அவர், கூட்டத்தொடரின் முதல் நாளில் வழக்கம் போல சபை நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், அன்று இரவே திடீரென ராஜினாமா செய்தது, டில்லி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஜக்தீப் தன்கரின் ராஜினாமா முடிவின் பின்னணியில் ஏதோ மர்மம் இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், ஜக்தீப் தன்கருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே என்ன நடந்தது என்பதை அவரே வெளிப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் விஜயபுரா என்ற இடத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏன் ராஜினாமா செய்தார் என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால், அவர் எப்போதும் அரசுக்கு ஆதரவாகவே நடந்துகொண்டார். விவசாயிகள், ஏழைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க முயன்ற போது எல்லாம், அவர் எங்களை சந்திக்க அனுமதி கொடுக்கவில்லை.
தலித்துகளுக்கு எதிரான கொடூரங்கள், பெண்கள் மீதான வன்முறைகள், இந்து-முஸ்லிம் பிரச்சினைகள் குறித்து நாங்கள் நோட்டீஸ் கொடுத்தாலும், அவர் விவாதிக்க அனுமதிக்கவே இல்லை. ஜக்தீப் தன்கருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே என்ன நடந்தது என்பதை அவரே வெளிப்படுத்த வேண்டும் எனக் கூறினார்.
