உடல்நலம் சீரானதைத் தொடர்ந்து இன்று தலைமை செயலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து, புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.
கடந்த 22-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கம் போல காலை நடைபயிற்சி சென்ற போது லேசான தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. உடனே சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டார். சுமார் ஒரு வாரமாக மருத்துவமனையில் இருந்த படியே அரசு அலுவல்களை முதலமைச்சர் கவனித்து வந்தார். உடல்நலம் தேறிய நிலையில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகம் வருகிறார். காலை 10.15 மணியளவில் முதலமைச்சர் அலுவலக நுழைவாயில் அருகே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, 2025-26-ம் கல்வி ஆண்டில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்ப கழகம், தேசிய சட்ட பல்கலைகழகம், Miranda House, University of Delhi போன்றவற்றில் சேர்க்கை பெற்ற 135 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தவுள்ளார்.
தொடர்ந்து காவல்துறை சார்பில் ரூ.27.59கோடி செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ரூ.13.54கோடி செலவிலும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் ரூ.60லட்ச ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் ரூ.3.74லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள போதை மருந்து ஆய்வுப் பிரிவுகள் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
ரூ.229.20கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 39 நபர்களுக்கும், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் கருணை அடிப்படையில் திருமதி கிருஷ்ணவேனி என்பவருக்கும் பணி நியமன ஆணையினையும் வழங்குகிறார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்ட “தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை-2025”-யினை வெளியிடுகிறார். வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் 27 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 மாநிலவரி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் செங்கல்பட்டு பதிவு மாவட்டத்தில் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தினை பிரித்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நாவலூர் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய 2 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் வருகிற 4-ந் தேதி நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து, கார்களின் முதல் விற்பனையையும் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 3-ந் தேதி மாலை சென்னையில் இருந்து அவர் விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு செல்கிறார்.