2023-ம் ஆண்டுக்கான 71-வது தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி.பிரகாசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹரீஷ் கல்யாண் நடிப்பில், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய பார்க்கிங் திரைப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் 2023-ம் ஆண்டு வெளிவந்த படம் வாத்தி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. வெங்கி அட்லூரி இப்படத்தை எழுதி இயக்கி இருந்தார். இப்படத்தின் இசைக்காக 20223-ம் ஆண்டுக்கான தேசிய விருதினை தட்டிச் சென்றுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தில் இடம்பெற்ற வா வாத்தி படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய நிலையில் தேசிய விருதினை அள்ளி உள்ளார் ஜி.வி.பிரகாஷ்..
மேலும் சிறந்த பிராந்திய மொழி திரைப்படமாக தமிழ் பிரிவில் பார்க்கிங் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு வெளிவந்த பார்க்கிங் திரைப்படத்தை சுதன் சுந்தரம், சினீஷ் ஆகியோர் தயாரித்து இருந்தனர். ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். ஹரீஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா ஆகியோர் நடித்திருந்தனர்.சாம் சி எஸ். இசையமைத்து இருந்தார். மேலும் இப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார் எம்.எஸ்.பாஸ்கர்.
அதுமட்டுமல்லாது சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது.
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பார்க்கிங் திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.