தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் ககன்தீப்சிங் பேடி குழு அமைக்கப்பட்டு 6 மாதங்கள் முடிந்து விட்டன. ஆனால், ககன்தீப்சிங் பேடி குழு இன்னும் அதன் அடிப்படைப் பணிகளைக் கூட இன்னும் தொடங்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் திமுக அரசுக்கு துளியளவும் இல்லை என்பதையே அதன் செயல்பாடுகள் காட்டுகின்றன.
இதுதொடர்பாக அன்புமணி விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு
பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைப்பதற்காக ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் குழுவை கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழு அதன் பரிந்துரை அறிக்கையை 9 மாதங்களுக்குள் அரசிடம் தாக்கல் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் 3-ஆம் நாளுடன் குழு அமைக்கப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. அடுத்த 3 மாதங்களில், அதாவது நவம்பர் 3-ஆம் தேதிக்குள் அதன் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்புகளுடனும் குறைந்தது ஒருமுறையாவது ககன்தீப் சிங் பேடி தலைமையிலான 3 உறுப்பினர்கள் கொண்ட குழு கலந்தாய்வு நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால், ககன்தீப்சிங் பேடி குழு இன்று வரை தனக்குக் கொடுக்கப்பட்ட பணியில் அணுவைக் கூட அசைத்ததாகத் தெரியவில்லை. குழுவின் பணி வரம்புகள் அறிவிக்கப்பட்டு விட்டதாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். ஆனால், அந்த பணி வரம்புகள் என்ன? என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசு அந்த அளவுக்கு ரகசியம் காக்கிறது.
ஆனால், அரசுக்கு விருப்பமில்லாத ஒரு கொள்கை முடிவை தீர்மானிப்பதற்காக ஒரு குழு அமைக்கப் பட்டால் அது ஆமை வேகத்தில் தான் அசைந்து செல்லும். அப்படித் தான் ககன்தீப்சிங் பேடி குழுவும். தமிழக அரசு நினைத்திருந்தால், எப்போதோ பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும். அதற்கு நிதிநிலை ஒரு தடையல்ல. மாறாக, தங்களை ஆட்சியில் அமர்த்தியவர்கள் தான் என்றாலும் கூட, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்த திமுக அரசுக்கு மனமில்லை. அதற்காகத் தான் ககன்தீப் சிங் குழுவையே அரசு அமைத்தது.
மீண்டும் சொல்கிறேன்… தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த எந்தத் தடையும் இல்லை. இந்தியாவில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும். இல்லாவிட்டால், தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் அமைக்கப்படவிருக்கும் புதிய அரசில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த பா.ம.க. உறுதியான நடவடிக்கை எடுக்கும்.