அரசு திட்டங்களில் முதலமைச்சர் பெயர் பயன்படுத்த தடையில்லை எனக் கூறியுள்ள நீதிமன்றம் சிவி.சண்முகத்திற்கு ரூ.10லட்சம் அபராதம் விதித்துள்ளது.
தமிழகத்தில் அரசு நலத்திட்டங்களில் முதலமைச்சர் பெயரை பயன்படுத்த தடைக்கோரி அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார். குறிப்பாக ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெற்றிருப்பதை பற்றி குறிப்பிட்டிருந்தார். இது 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி தவறானது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதுதொடர்பான விசாரணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதில் திமுக, அதிமுக என இருதரப்பு வழக்கறிஞர்களும் காரசார விவாதத்தை முன்வைத்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் இப்படிப்பட்ட திட்டங்களை செயல்படுத்தவில்லையா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சி.வி.சண்முகம் தரப்பு மறுப்பு தெரிவிக்க, திமுக தரப்பில் பட்டியல் ஒன்று காண்பிக்கப்பட்டது.
இவ்வாறு காரசார விவாதத்தின் இறுதியில் அரசு திட்டங்களில் முதலமைச்சர் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று தீர்ப்பு வழங்கி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்து சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி.அன்ஜாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், அரசியல் பிரச்சினையை தேர்தல் களத்தில் தான் பேசிக் கொள்ள வேண்டும் எனக் கூறி வருகிறோம்.
அரசியல் மோதலை தீர்த்துக் கொள்ள நீதிமன்றத்தை மேடையாக பயன்படுத்தக் கூடாது. சட்டத்தை தவறாக புரிந்து கொண்டு அதிமுக வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அத்தோடு வழக்கு தொடர்ந்த சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.