உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் மம்முட்டி டிஸ்சார்ஜ் ஆகி மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் மம்முட்டி, உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதம் முதல் சினிமாவில் இருந்து விலகி ஓய்வெடுத்து வந்தார். நோய் பாதிப்பில் இருந்து குணமாகி வரும் அவர் மீண்டும் சினிமாவில் களமிறங்கவுள்ளார்.
அவருக்கு புற்றுநோய் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதனை மலையாள சினிமா சங்கம் முற்றிலும் மறுத்தது. கிட்டத்தட்ட 7 மாதங்களாக ஓய்வில் இருந்த மம்முட்டிக்காக, நடிகர் மோகன்லால் சபரிமலை சென்று பிரார்த்தனை செய்திருந்தார். இந்த நிலையில், மம்முட்டி உடல்நலம் தேறி விட்டதாக நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார்.
மம்முட்டியுடனான புகைப்படத்தை மோகன்லால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரை தொடர்ந்து மலையாள சினிமா நடசத்திரங்கள் பலரும் மம்முட்டியின் வரவை கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.
மம்முட்டியின் உடல்நிலை தொடர்பாக அவரது நண்பரும், எழுத்தாளருமான வி.கே. ஸ்ரீராமன், “சிகிச்சையின் ஆரம்பக் கட்டங்களில், அவர் உணவின் சுவை தெரியவில்லையெனவும், மணம் உணரும் திறனை இழந்துவிட்டதாகவும் கூறினார்.
இப்போது எல்லாம் குணமாகிவிட்டது. அவர் விரைவில் திரும்புவார். மம்மூட்டி அவரே தொலைப்பேசியில் அழைத்து, தான் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகக் கூறினார்.
அவரது குரலில் ஒருபோதும் பலவீனத்தின் அறிகுறி இருந்ததில்லை. அவர் பேசும்போது ஒரு நோயாளியின் குரல் போலவே இல்லை.
எப்போதும் இருக்கும் அதே வலிமை, அதே ஆற்றல் இப்போதும் இருக்கிறது. அவர் என்னைத் தொடர்ந்து அழைத்துப் பேசுகிறார்.
முதலில், அவர் அழைக்கும்போது, உணவு சுவை தெரியவில்லை என்றோ நடப்பது கடினமாக இருக்கிறது என்றோ குறிப்பிடுவார். ஆனால், அவர் அந்தப் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. பெரும்பாலும், எங்கள் உரையாடல்கள் வேறு விஷயங்களைப் பற்றியதாக இருக்கும்.
சொல்லப்போனால், சில நேரங்களில் அரசியல், சில நேரங்களில் விவசாயம் எனப் பல விஷயங்கள் தொடர்பாகப் பேசுவோம்” எனக் கூறியிருக்கிறார்.