சென்னையில் போலீஸ் பாதுகாப்பை மீறி பிள்ளையார் சிலை எடுத்து சென்ற நடிகர் உட்பட 53 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பல இடங்களில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. ஒருவாரம் அக்டந்த நிலையில் இந்த சிலைகளை சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதியில் கரைக்க போலீசார் அனுமதி அளித்தனர். அந்த வகையில் நேற்று காலை 10 மணி முதல் ஆயிரக்கணக்கான சிலைகள் போலீசாரின் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலை ஊர்வலத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக சென்னை திருவல்லிகேணி ஐஸ் ஹவுஸ் சந்திப்பில் முள்வேலி வைத்து, தடை செய்யப்பட்ட வழித்தடத்தில் பிள்ளையார் ஊர்வலத்தை போலீசார் கட்டுப்படுத்தினர். விநாயகர் ஊர்வலம் முடிந்த பின்பு இந்து முன்னணி அமைப்பினர் போலீசார் தடுப்பையும் மீறி, கையில் சிலை ஏந்தி அனுமதி மறுக்கப்பட்ட இடம் வழியாக சிலையை எடுத்துச் செல்ல முற்பட்டனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அனுமதியின்றி விநாயகர் சிலை எடுத்து சென்றதாக இந்து முன்னணி மாநிலச் செயலாளர் மணலி மனோகரன், நடிகர் கனல் கண்ணன் உள்ளிட்ட 53 இந்து முன்னணியினர் மீது ஜாம் பஜார் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.