ஆசியக்கோப்பை குரூப் சுற்று லீக் போட்டியில் வலுவான இந்திய அணியுடன், கத்துக்குட்டி அணியான ஓமன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.
17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
தொடரின் 12ஆவது போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியும், ஓமன் அணியும் மோதவுள்ளன. இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிட்டதால், இந்த போட்டி சம்பிரதாய போட்டியாக நடைபெறும்.
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி கண்டிருந்தது. இதனால், ஆசியக்கோப்பை தொடரில் அதிகப்பட்ச ரன் விகிதத்தில் (4.793) முதலிடத்தில் இந்திய அணி உள்ளது.
மேலும், கடைசியாக விளையாடியுள்ள 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது. அதே சமயம் ஓமன் அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியையே தழுவியுள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்திருந்தது.
இந்திய அணியை பொறுத்தமட்டில் மிகப்பெரும் வலுவான அணியாக உள்ளது. அதிரடி ஹிட்டர்களான அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் என பெரிய பட்டாளமே உள்ளது.
அதேபோல் பந்துவீச்சிலும், ஜாஸ்பிரிட் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷதீப் சிங் என தரம் வாய்ந்தவர்கள் உள்ளார்கள். இவர்களை எதிர்கொள்ள ஓமன் அணி பெருத்த சிரமத்திற்கு உள்ளாகும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஜிதேஷ் சர்மாவுக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை விக்கெட் கீப்பராக செயல்படுவார் என தெரிகிறது.
அதே சமயம் ஓமன் அணி இதுவரையில் பெரிய தொடர்கள் எதிலும், குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருக்கவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் கூட தோல்வியையே தழுவி இருந்தது. இடது கை சுழற்பந்துவீச்சாளரான ஷாகில் அஹமது இந்த தொடரில் சிறப்பாக செயலாற்றி வந்துள்ளார். அவர், அபிஷேக் சர்மாவுக்கு எதிராக சிறப்பாக வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி கடந்த இரண்டு போட்டிகளிலும், ஆடும் லெவனின் வீரர்களை மாற்றாமல் ஒரே வீரர்களுடன் விளையாடியது. ஆனால், ஓமன் அணி 14 வீரர்களை பயன்படுத்தி உள்ளது. இரு அணிகளும் மோதிக் கொள்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் 4 சுற்றுக்கு ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் முன்னேறி உள்ளன. ‘பி’ பிரிவில் இலங்கை அணியும், வங்கதேசம் அணியும் முன்னேறி உள்ளன. இந்திய அணி நாளை மறுதினம், (செப்டம்பர் 21) சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.