நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் எட்டாம் தேதி வரை இறுதி வாய்ப்பு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்பு பணம் வழங்குவதாக கூறி தமிழகம் முழுவதும் முதலீட்டாளர்களைச் சேர்த்தனர்.
பணத்தைத் திருப்பித் தராமல் முதலீட்டாளர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணம் மோசடி செய்ததாக நியோமேக்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக மதுரை, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் ஆர்.முனியப்பராஜ், நியோ மேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு விவரங்களை தாக்கல் செய்தார்.
மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நிவாரணம் கிடைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவாதாக வாதிட்டார். இதனையடுத்து, அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி இந்த வழக்கில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது எளிமையாக இருக்கும் கூறினார்.
மேலும், நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் உரிய ஆவணங்களுடன் அக்டோபர் எட்டாம் தேதிக்குள் நேரிலோ அல்லது eowmadurai2@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் புகார் அளிக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார். அக்டோபர் எட்டாம் தேதிக்குள் புகார் அளிப்பவர்களுக்கு மட்டுமே இழந்த தொகை பெற்றுத்தரப்படும் எனக்கூறிய நீதிபதி வழக்கை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.