புதுச்சேரியில் மாசு கலந்த குடிநீர் விநியோகத்தை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் நெல்லித்தோப்பு மற்றும் உருளையன்பேட்டை பகுதிகளில் மாசு கலந்த குடிநீரை குடித்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதில் 6 நபர்கள் உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையே நேற்று நெல்லித்தோப்பு பகுதிகளில் கான்வென்ட் வீதி, பள்ளிவாசல் வீதி, ராஜா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பகுதிகளில் மாசு கலந்த குடிநீரை குறித்து 25க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதாள சாக்கடை இணைப்புக்காக ஒப்பந்ததாரர் பணிகளை மேற்கொள்ளும் போது அப்பகுதியில் உள்ள குடிநீர் இணைப்பு சேதப்படுத்தியதன் காரணமாக குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பது தகவல் வெளியாகியுள்ளது, இதனை சரி செய்யும் பணியில் பொதுப்ணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாசு கலந்த குடிநீர் விநியோகத்தை கண்டித்தும் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மாநில அரசை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரசார் துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு தரையில் அமர்ந்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தத் தகவலை அறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னாள் முதல்வருக்கு ஆதரவு தெரிவிக்க ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். அப்போது போலீசார் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் ஆளுநர் மாளிகையின் இரண்டு நுழைவாயிலும் தடுப்புகள் அனைத்து தடுத்து நிறுத்தினர். இருந்த போதிலும் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய காங்கிரசார் முயன்றதால் போலீசாருக்கும், காங்கிரசார் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகளை ஆளுநரிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து சென்றார், பேச்சுவார்த்தையின் பொழுது சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் முன்னாள் முதலமைச்சர் நாராயண சாமியிடம் உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், நெல்லித்தோப்பு மற்றும் நகரப் பகுதிகளில் தொடர்ந்து வாசு கலந்த குடிநீரை குறித்து பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோ உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. மேலும் இதுவரை 6 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் ஆனால் இதன் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வர் அமைச்சர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூட சொல்லவில்லை. இறந்தவர்களுடைய குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. பொறுப்பற்ற முறையில் ஆட்சியை நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.