கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்களைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றா மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 27ம் தேதி கரூரில் தவெகவின் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் பேசி கொண்டிருக்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு கண்டனங்கள் வலுத்து வந்ததுடன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரூரில் 41 பேர் உயிரிழந்த போது தலைமறைவான புஸ்ஸி ஆனந்த் வெளியே வரவில்லை. இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் முன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கரூர் பிரச்சாரத்தில் 41பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலர் ICUவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணை தொடக்க நிலையிலேயே உள்ளதால் பொதுச்செயலாளருக்கும், புஸ்ஸி ஆனந்துக்கும் முன்ஜாமின் வழங்க இயலாது எனக்கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கரூர் உயிரிழப்பு விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் 2ஆம் குற்றவாளியாகவும், நிர்மல் குமார் 3ஆம் குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் குற்றவாளி மதியழகன் மற்றும் பவுன்ராஜ் செப்டம்பர் 29ம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.