கரூர் விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழுவை ரத்து செய்த உச்சநீதிமன்றம் உத்தரவு தொடர்பாக தவெகவின்
ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”கரூர் சம்பவத்தில் வலி மிகுந்த நாட்களில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம், இதை கூற வார்த்தைகள் இல்லை. இதற்கு முன்பாக பல ஊர்களுக்கு தவெக தலைவர் விஜய் பயணம் மேற்கொண்டார். கடந்த 50 ஆண்டுகளில் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத எழுச்சியை மக்கள் பதிவு செய்தனர்.
ஆனால் சில மாவட்டங்களை விடுத்து பிற அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை. அசம்பாவிதம் நடந்த கரூருக்கு சென்ற போது காவல்துறை எங்களை வரவேற்றது, இது எங்கும் நடக்காதது. காவல்துறையே எங்களை உரிய இடத்துக்கு அழைத்து கொண்டு சென்றனர். எங்கெல்லாமல் மக்கள் வந்தனரோ அங்கெல்லாம் தவெக தலைவர் விஜய் மக்களை சந்தித்தார்.
கரூரை பொறுத்த வரைக்கும் அந்த சம்பவம் நடைபெற்ற போது என்னென்ன விவகாரங்கள் நடைபெற்றதோ, அது அனைத்தையும் தலைமை நீதிபதியிடம் நாங்கள் அறிக்கையாக சமர்ப்பிக்க இருக்கிறோம். குறிப்பாக தவெக மாவட்ட செயலாளர் அனைவரையும் சம்பவத்தின்போது தடியடி செய்து போலீஸ் கலைத்தனர். கரூர் விவகாரத்தில் திமுக பல விளையாட்டுகளை விளையாடி உள்ளது.
எங்கள் மீது எதற்காக திமுகவுக்கு இத்தனை கோபம்,
ஒட்டு மொத்த தமிழ்நாடு அரசின் நிர்வாகமும் எங்களுக்கு எதிராகவே செயல்பட்டது. தமிழ்நாடு அரசின் மீது எந்த வகையிலும் நம்பிக்கை இல்லை. தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் குழு மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு நபரை வைத்து வழக்கை போட்டுவிட்டு அதில் சமந்தமே இல்லாமல் விஜய் மற்றும் அவருடைய அரசியல் மற்றும் அவருடைய தலைமை பண்பு உள்ளிட்டவத்தை குறித்து பேசி இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் வாதாட எங்களுக்கு வழக்கறிஞர்கள் யாரும் கிடைக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு சதிகளை அரங்கேற்றி இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் எங்களுடைய தரப்பு அனைத்து நியாயங்களையும், கோரிக்கைகளையும் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியன் மற்றும் அரியமா சுந்தரம் மூலமாக நாங்கள் எடுத்து வைத்தோம்” என்றார்.
மேலும் கரூரில் உயிரிழந்த 41 குடும்பங்களையும் வாழ்க்கை முழுவதும் தத்தெடுத்து அவர்களோடு பயணம் செய்ய தவெக தலைவர் விஜய் முடிவெடுத்துள்ளதாக ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.