எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது முதலமைச்சர் சிபிஐ விசாரணை கேட்டதாகவும், தற்போது சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று உள்நோக்கத்துடன் சொல்கிறார் எனவும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்ட தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. டி.ஆர்.பாலுவினை குறுக்கு விசாரணை செய்வது தொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “குறுக்கு விசாரணையில் இரண்டு மூன்று வாதங்களை செய்திருக்கிறோம். நீதிமன்றத்தில் நாங்கள் ஒரு மெமோ ஃபைல் செய்திருக்கிறோம், அடுத்த வாய்தாவில் நானே வழக்கை நடத்துகிறேன் என நீதிபதியிடம் கூறினோம். அதற்கு பால் கனகராஜ் உதவி புரிவார்கள் என முறையீடு செய்ததாகவும், அதற்கு நீதிபதி அனுமதி கொடுத்துள்ளார்.
அடுத்த குறுக்கு விசாரணை நவம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று நானே ஆஜராகி, திமுக ஃபைல்ஸ் உள்ளிட்ட பல விஷயங்களை நான் பேச உள்ளேன். டி.ஆர்.பாலு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் நீதிபதி முன்பு கூற இருக்கிறேன். கடந்த 40 ஆண்டுகால வரலாற்றை முழுமையாக கோர்ட்டு மூலமாக தமிழக மக்களுக்கு தெரிவிக்க இருக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், “நம்முடைய நோக்கம் எல்லாம் தமிழகத்தில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகள் வெளியே கொண்டு வந்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதே. அதனால்தான் நான் யாரின் மீதும் இதுபோன்ற அவதூறு வழக்கு தொடுக்கவில்லை. திமுகவினர்கள் யாராவது என் மீது வழக்கு தொடர்வார்கள் என எதிர்பார்த்தேன். அந்த வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
கரூரில் 41 பேர் உயிரிழந்தது விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணை வேண்டும் என்பது நமது நோக்கம். அப்பொழுதுதான் விசாரணை முழுமையாக நடைபெறும். கூட்டத்தில் யாராவது மர்ம நபர்கள் கலந்து கொண்டார்களா? யார் வந்து போனார்கள், என அனைத்தையும் தெரிந்து கொள்வதற்கு சிபிஐ விசாரணை கேட்கிறோம்.
பாஜகவின் வழக்கறிஞர் ஒருவரும், மாமன்ற உறுப்பினர் ஒருவரும் தனித்தனியாக அவரது விருப்பத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். இன்று அந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருப்பதும், கூடுதலாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெறுவதற்கு அதிகாரிகள் நியமித்திருப்பதன் வரவேற்கத்தக்கது” என அவர் தெரிவித்துள்ளார்.
போலியாக சில வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக எழுப்பிய கேள்விக்கு, இதில் சம்பாதிப்பட்டவர்கள் அதிகாரிகளாக இருந்தால் கூட, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இருக்க கூடாது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களை கூட தவறான முறையில் வழிநடத்தி இருக்கிறார்கள். எனவே அவர்களை தவறாக வழி நடத்துபவர்களை கூட உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.
நீதிமன்றம் அவர்களது கடமையை செய்கிறார்கள். இன்று எல்லா தரப்பு கட்சிகளும் வைத்திருக்கும் வாதங்களும் இன்று தீர்ப்பில் வந்துள்ளது. குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். அதே சமயம் பாஜகவின் சார்பில் சிபிஐ விசாரணை தேவை எனவும் வழக்கு தொடர் பட்டிருந்தது இவை அனைத்திற்கும் இந்த தீர்ப்பு வரும் முன்னுதாரணமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், “கரூரில் வருகின்ற 17ஆம் தேதி TVK சார்பில் விஜய் வருகிறார் என கூறி நிறைய திருமண மண்டபத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. எதற்காக அனுமதி மறுக்கப்படுகிறது? விஜய் அங்கே செல்வது அவரது உரிமை, காவல்துறை அனுமதி கொடுப்பது அவர்களது கடமை. முதல்வரை பொறுத்தவரை சிபிஐ விசாரணை வேண்டும் என பலமுறை எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கேட்டிருந்தார். அப்போது ஏன் சீமான் அவர்கள் இதனை கேட்கவில்லை?
இன்று சிபிஐ விசாரணை வேண்டும் என உச்சநீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது சிபிஐ விசாரணை வேண்டும் என முதல்வர் கேட்கும்போது, ஆளும் கட்சியாக இருக்கும் போது ஏன் வேண்டாம் என கூறுகிறார்கள்? சிபிஐ விசாரணைக்கு ஏன் சீமான் அண்ணன் ஏன் பதட்டப் படுகிறார் என தெரியவில்லை” என்று தெரிவித்தார்.