ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான ஐந்தாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்த டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி தற்சமயம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணியும் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் இத்தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றிருந்தது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5ஆவது மற்றும் கடைசி போட்டி இன்று பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா – ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதன் மூலம், இந்திய அணி 4.5 ஓவர்களில் விக்கெட்டுகள் இழப்பின்றி 52 ரன்களைச் சேர்த்திருந்தது. அச்சமயத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பின் தொடர் மழை காரணமாக ஐந்தாவது டி20 போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
மேலும் இத்தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றும் அசத்தியுள்ளார். மேலும் இத்தொடரை இந்திய அணி கைப்பற்றியதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று டி20 தொடர்களையும் வென்று அசத்தியுள்ளது
