சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல விளக்கு மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலை கோயிலில் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கோயில் வளாகம் முழுவதும் கடும் கூட்டம் காணப்படுகிறது.
மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டு சன்னிதானத்தில் ஐயப்ப சாமியை பார்க்க முண்டியடித்து சென்று வரும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஐயப்ப பக்தர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கோழிக்கோடு கோயிலாண்டியைச் சேர்ந்த சதி (58) என்ற பெண் பக்தர் பம்பாவிலிருந்து நீலிமலை ஏறும் போது அப்பாச்சிமேடு அருகே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உடனடியாக அவருடன் வந்த சக பக்தர்கள், ஆம்புலன்ஸ் உதவிக் கோரி பம்பாவில் உள்ள மருத்துவமனையை தொடர்பு கொண்டதாக தெரிகிறது. ஆனால், தங்களுக்கு எந்த மருத்துவ உதவியும் கிடைக்கவில்லை என்று உயிரிழந்த பெண்ணுடன் வந்தவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கேரள அரசு தவறிவிட்டதாக அந்த மாநில எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதனிடையே, சபரிமலையில் கூட்டம் கட்டுக்குள் இருப்பதாக டிஜிபி ரவடா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “நவம்பர் 17 ஆம் தேதி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். பக்தர்கள் வெர்ச்சுவல் கியூ முன்பதிவு செய்த நாளில் மட்டுமே வர வேண்டும். பலர் அதனை பின்பற்றுவதில்லை. இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. சபரிமலையில் போதுமான காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்ததே பிரச்சனைக்கு காரணம். குறிப்பாக நேற்று ஒரே நாளில் 5,000 பேருந்துகள் மூலம் சபரிமலைக்கு பக்தர்கள் வந்துள்ளனர்.
பம்பைக்கு வந்த அனைவரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வழக்கமான நாட்களில் இவ்வளவு கூட்டம் வருவதில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளின் கூட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகமாக உள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
சபரிமலை கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் பலியான நிலையில், முதியவர்களை பாதுகாப்பாக கோயிலுக்கு அழைத்து வர சபரிமலை தேவஸ்தான போர்டு பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
