லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 2023 முதல் நடைபெற்ற இஸ்ரேல், காசா போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
காசாவுடனான போர் தொடங்கியதில் இருந்தே தனது வடக்கு எல்லையான யாரோன் பகுதியை இஸ்ரேல் பலப்படுத்தி வருகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள லெபனான் அதிபர் ஜோசப் அவுன், தங்களின் எல்லையைத் தாண்டி இஸ்ரேல் வருவதாகவும், அந்தப் பகுதியில் சுவர் எழுப்பும் பணிகளை இஸ்ரேல் மேற்கொள்வதாகவும் அவுன் குற்றம்சாட்டி உள்ளார்.
லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து ஆயுதங்களை ஹிஸ்புல்லா அமைப்பினர் குறைக்க வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரித்து இருந்தது. இந்தநிலையில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதையடுத்த லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
லெபனானின் தெற்கில் 5 இடங்களில் இஸ்ரேல் நிறுத்தி உள்ள தனது படை நிலைகளை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதலுக்கு, இஸ்ரேல் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர். ஹமாசிற்கான பயிற்சி மையமாக அகதிகள் முகாம் செயல்பட்டு வந்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது. ஹமாசின் செயல்பாடுகள் எங்கு இருந்தாலும், இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
