கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ் இலக்கிய உலகில் ஒளிர்ந்த நட்சத்திரம் ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் பிறந்த ந.ஜெகதீசன், கல்லூரியில் படிக்கிற நாள்களிலேயே தமிழன்பன் எனும் புனைபெயரில் கவிதைகளை எழுதினார்.
டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையிலான கவியரங்கில் அவர் பங்கேற்ற போது, ‘ஈரோடு தமிழன்பன்’ என கலைஞர் அழைக்கவே, அதுவே பின்னாளில் பெயராக நிலைத்தது.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு அவர் மீது பற்று கொண்டார்.
கல்லூரியின் இளங்கோ மன்ற ஆண்டு விழாவிற்குத் தலைமையேற்க, பாவேந்தரை அழைத்து வந்தார் தமிழன்பன்.
பாரதிதாசனின் கவிதைகள் மீதான ஈர்ப்பும், அவருடனான நட்பும் தமிழன்பனுக்குப் பெரும் ஊக்கத்தை வழங்கின. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு புரட்சிக் கவிஞரோடு பத்தாண்டுக் காலம் உடன் பயணித்தார். தமிழன்பனின் ‘நெஞ்சின் அலைகள்’ நாவலின் கையெழுத்துப் பிரதியை வாசித்த பாரதிதாசன், அதனை நூலாக்க உதவினார். பாரதிதாசன் மறைவுக்குப் பிறகு 1965இல் அந்த நாவல் வெளிவந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டத்தையும், முனைவர் பட்டத்தையும் பெற்றார். மரபுக் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த தமிழன்பன், புதுக்கவிதையின் பக்கமாகத் தன் கவனத்தைத் திருப்பினார்.
தமிழ்க் கவிதைப் பரப்பில், முன்னை மரபுக்கும் பின்னை புதுமைக்கும் பாலமாக இருந்து தமிழ் இலக்கிய உலகில் சிகரம் தொட்டவர்.
சென்னை புதுக்கல்லூரி தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழன்பன், முன்பே ‘பொதிகை தொலைக்காட்சி’யில் பகுதிநேர செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார்.
கவிதை, நாவல் எழுதியதோடு சிறுகதை, நாடகம், சிறார் இலக்கியம், வாழ்க்கை வரலாறு, திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பல வகைமைகளிலும் 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்தி, வங்காளம், மலையாளம், ஆங்கிலம், உருது உள்ளிட்ட பல மொழிகளிலும் அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நிறவெறிக்கு எதிராகப் போராடிய ஆப்பிரிக்க – அமெரிக்கத் தலைவரான மார்ட்டின் லூதர் கிங் வாழ்க்கையைக் கவிதை வடிவில், ‘காலத்தால் மறையாத கருப்புச் சூரியன்’ எனும் நூலாக எழுதினார் தமிழன்பன்.
தமிழ் இன உணர்வும் தன்மான உணர்வும் ஈரோடு தமிழன்பன் அவர்களை திராவிட இயக்கத்தின் இலட்சியக் கவிஞர்கள் வரிசையில் இடம்பெறச் செய்தது.
“வணக்கம் வள்ளுவ“ என்ற நூலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற ஈரோடு தமிழன்பன், தமிழ் மொழிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் ஆற்றிய அருந்தொண்டு என்றென்றும் நிலைத்து நிற்கும்.
ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ குறிப்பிட்டுள்ளார்.
