தினமும் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல வகையான காய்கறிகளை வாங்கி அடுக்கி வைத்தாலும், பல சமயங்களில் அவற்றை சமைக்காமல் அப்படியே விட்டுவிடுவோம். அதிலும், இதுதான் கெட்டுப்போகாதே, மெல்ல சமைக்கலாம் என்ற அலட்சியத்தால் சில காய்கறிகள் நம் கவனத்தை இழந்துவிடுகின்றன. அந்தக் காய்கறிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது உருளைக்கிழங்கு.
உருளைக்கிழங்கு மற்ற காய்கறிகளைப் போல உடனடியாகக் கெட்டுப்போகாது என்பது உண்மைதான். ஆனால், நீண்ட நாட்கள் வைத்திருக்கும்போது அதில் மெல்லிய முளைகள் எட்டிப்பார்க்கத் தொடங்கும். அப்படி பார்த்திருக்கிறீர்களா? பலரும், அந்த உருளைக்கிழங்கை “கெடவில்லை, முளையை மட்டும் நீக்கிவிட்டு சமைக்கலாம்” என்று முளைகளை மட்டும் நீக்கி சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். ஆனால், அந்த முளை விட்ட உருளைக்கிழங்கில் மறைந்திருக்கும் ஆபத்தான ஆரோக்கியக் கேடு பற்றி பலருக்கும் தெரியவில்லை.
முளை விட்ட உருளைக்கிழங்கில் உள்ள ஆபத்து என்ன?
உருளைக்கிழங்கு முளைக்கும்போது, அதன் வேர் மற்றும் தண்டுப் பகுதிகளில் கிளைக்கோஅல்கலாய்டுகள் (Glycoalkaloids) என்னும் நச்சுப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. இதில் முதன்மையானது சொலனைன் (Solanine) மற்றும் சகோனைன் (Chaconine) ஆகும்.
சொலனைன் நச்சு: உருளைக்கிழங்கு முளை விடும் போதும், அது பச்சை நிறமாக மாறத் தொடங்கும்போதும் இந்த நச்சுப் பொருளின் அளவு அதிகரிக்கிறது. இந்த சொலனைன், உருளைக்கிழங்கின் முளைகள், தோல் மற்றும் பச்சைப் பகுதிகள் ஆகியவற்றில் அதிக அளவில் குவிந்திருக்கும். குறைந்த அளவு சொலனைனைக் கொண்டிருக்கும் உருளைக்கிழங்கை உட்கொண்டால், அது கசப்புச் சுவையுடன் இருக்கும்.
ஆனால், நச்சுத்தன்மை அதிகமுள்ள முளைத்த உருளைக்கிழங்கை உட்கொள்ளும்போது அது இரைப்பை மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளை உண்டாக்கலாம். மேலும், இந்த உருளைக்கிழங்கை சமைத்துச் சாப்பிடும்போது ஏற்படக்கூடிய பொதுவான அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
- சொலனைன் உடலில் செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தி, கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தியைத் தூண்டலாம்.
- இந்த நச்சு செரிமான மண்டலத்தை சீர்குலைத்து வயிற்றுப்போக்கிற்கு வழிவகுக்கும்.
- அதிக அளவில் நச்சு உடலினுள் செல்லும்போது சிலருக்கு கடுமையான தலைவலி மற்றும் தலைசுற்றல் ஏற்பட வாய்ப்புள்ளது.
- சொலனைன் வாயில் எரிச்சலூட்டும் உணர்வை ஏற்படுத்தலாம்.
சமைத்தப்பின் நச்சுத்தன்மை குறைக்குமா?
முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், முளைவிட்ட உருளைக்கிழங்கின் மற்ற பாகங்களில் உள்ள நச்சுத்தன்மையை சமைப்பது ஓரளவுக்குக் குறைக்கலாம். ஆனால், முளைகளில் அதிக செறிவில் உள்ள சொலனைன் நச்சு, வெப்பத்தின் மூலம் எளிதில் அழியாது. எனவே, முளைகளை நீக்கினாலும் உருளைக்கிழங்கின் மற்ற பகுதிகளிலும் நச்சு பரவியிருக்க வாய்ப்பு உள்ளது.
பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
- உருளைக்கிழங்கில் முளைகள் தோன்றினாலோ அல்லது அதன் தோல் பச்சை நிறமாக மாறினாலோ, அதனை முழுமையாகத் தூக்கி எறிந்துவிடுவதுதான் பாதுகாப்பானது. முளைகளை மட்டும் நீக்குவது முழுமையான பாதுகாப்பு அளிக்காது.
- உருளைக்கிழங்கை எப்போதும் குளிர்ச்சியான, இருண்ட மற்றும் உலர்வான இடத்தில் சேமிக்க வேண்டும். சூரிய ஒளி படுவது அல்லது அதிக வெப்பம் நச்சு உற்பத்திக்கு வழிவகுக்கும்.
- முளைப்பதைத் தவிர்க்க, ஒரே நேரத்தில் அதிக அளவில் வாங்கி சேமிக்காமல், தேவைக்கேற்ப குறைந்த அளவில் வாங்கிப் பயன்படுத்துவது சிறந்தது.
