குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் அவர்கள் பார்க்கும் விஷயங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, தொலைக்காட்சியில் வரும் காட்சிகள் நிஜத்திலும் நிகழும் என்பது குழந்தைகளின் நம்பிக்கை. அதனால், விளம்பரத்தில் வரும் பல பொருட்களை வாங்கி கொடுக்க சொல்லியும், அதில் வருவதை போலவும் நடந்து கொள்வார்கள்.
அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்று தான், டூத் பேஸ்ட் (பற்பசை) பற்றிய விளம்பரங்கள். இந்த விளம்பரங்களில், டூத் பேஸ்ட் முழுவதும் பேஸ்ட்டை நிரப்பி பல் துலக்குவார்கள். இதனை பார்த்து குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் அதையே பின்பற்றுகிறோம். நிறைய பேஸ்ட் வைத்து தேய்த்தால் பல் பளபளப்பாகும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால், உண்மையில் பல் ஆரோக்கியத்தை பாதுகாக்க எவ்வளவு பேஸ்ட் அவசியம் என நீங்கள் யோசித்தது உண்டா?
உண்மையில், நாம் எவ்வளவு டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும் என்பது நமது வயது மற்றும் பற்களின் நிலையைப் பொறுத்து மாறுபடும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதிகமாக பயன்படுத்துவதும் ஆபத்து என்கிறார் மருத்துவர். அந்த வகையில், பல் ஆரோக்கியத்திற்கு வயதிற்கு ஏற்ப எவ்வளவு டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பல் மருத்துவர் கூறுவது என்ன?
டூத் பேஸ்ட் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் குறித்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பல் மருத்துவர் மைஸ் மேடிச்சன் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு வயதினரும் பயன்படுத்த வேண்டிய சரியான அளவு என்ன? அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை பதிவிட்டுள்ளார்.
உலகளவில் 40 சதவீதத்திற்கு அதிகமான மக்கள் தேவைக்கு அதிகமாக டூத் பேஸ்ட் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். மேலும், அதிக பற்பசை பயன்படுத்துவது பற்களின் எனாமலுக்கு (Enamel) சேதத்தை ஏற்படுத்தலாம், குறிப்பாக குழந்தைகளுக்கு ‘ஃப்ளோரோசிஸ்’ (Dental Fluorosis) எனும் பற்களில் நிறமாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் அவர் எச்சரிக்கிறார்.
வயது வாரியாக பயன்படுத்த வேண்டிய அளவு!
- 0 – 3 வயது வரை (முதல் பல் முளைத்ததில் இருந்து) ஒரு அரிசியின் அளவில் பயன்படுத்தவும்.
- 3 – 6 வயது வரை ஒரு பட்டாணி அளவில் டூத் பேஸ்ட் பயன்படுத்தினால் போதும். இந்த குறிப்பிட்ட காலத்தில் குழந்தைகளுக்கு பேஸ்ட்டை விழுங்காமல் துப்பப் பழக்க வேண்டும்.
- 6 வயதுக்கு மேல் மற்றும் பெரியவர்களுக்கு ஒரு பட்டாணி அளவு போதுமானது. அதிக நுரைக்காக அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை.
அளவை மீறினால் ஏற்படும் பாதிப்புகள்!
- ஃப்ளோரைடு (Fluoride) எனும் வேதிப்பொருள் பற்சிதைவைத் (Cavities) தடுக்க உதவுகிறது. ஆனால், அதை அதிகமாக பயன்படுத்துவது குறிப்பாக குழந்தைகள் அதனை விழுங்கும் போது பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- குழந்தைகளுக்கு இந்த ஃப்ளோரைடை அதிகமாக உட்கொள்வது, பற்கள் வளரும்போது நிரந்தரமாக நிறமாற்றம் அல்லது வெள்ளை/மஞ்சள் புள்ளிகளை ஏற்படுத்தும். பற்களின் எனாமலில் பள்ளங்களும் ஏற்படலாம். குழந்தைகள் பற்பசையை விழுங்க நேரிடுவதால், சிறிய அளவில் பயன்படுத்துவது மிக அவசியம்.
- பெரியவர்கள் அதிக பற்பசையை பயன்படுத்துவது, அதிகப்படியான நுரையை உருவாக்கி, வேகமாகவே பல் துலக்கும் உணர்வை கொடுக்கலாம். இதனால் சரியான சுத்திகரிப்பு நடைபெறாமல் போகலாம்.
- அதிக பேஸ்ட்டுடன் கடினமாகத் துலக்குவது காலப்போக்கில் பற்களின் பாதுகாப்பு எனாமலை அரிக்கலாம் (Erode Enamel) மற்றும் ஈறுகளை எரிச்சலூட்டலாம்.
முக்கியக் குறிப்புகள்:
- நாம் எந்த டூத் பேஸ்ட் பயன்படுத்துகிறோம் என்பதை விட, துலக்கும் நுட்பமும் (Technique), துலக்கும் நேரமும் (இரண்டு நிமிடங்கள்) மிக முக்கியம்.
- பெரியவர்கள் குறைந்தது 1350 ppm (parts per million) ஃப்ளோரைடு கொண்ட பற்பசையைப் பயன்படுத்த வேண்டும்.
