திருப்பரங்குன்றம் மலை உச்சி மீது தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அனுமதி வழங்கி உள்ளது.
முருகப்பெருமானின் முதல் படை வீடு அமைந்துள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சி மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மதுரையை சேர்ந்த எழுமலை ராம ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலையில் டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றும் வகையில் ஏற்பாடு செய்ய, சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பியதாகவும், மலை உச்சியில் உள்ள, பழமையான தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சட்ட ரீதியாக தடை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. தர்காவில் இருந்து 15 மீட்டர் தொலைவில் தீபத்தூண் ஏற்றும் இடம் உள்ளதாகவும், இருப்பினும் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படுவதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தவறான உள்நோக்கில், ஆதாரம் இல்லாமல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு நேரில் சென்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விசாரணை முடிவில் இன்று (டிச. 1) தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், மலை உச்சியில் இருக்கும் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என நீதிபதி சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
