கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
கடந்த 2019ல் கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்திற்கு நிதி திரட்டுவதற்காக லண்டன் பங்குச்சந்தையில் ரூ.2,150 கோடி மதிப்பில் மசாலா பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இதில், முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மசாலா பத்திரங்கள் வெளியீட்டில் அன்னிய செலவாணி விதிமீறல் நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது.
இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அவரின் தனிச் செயலாளர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதில், அன்னிய செலவாணி மேலாண்மை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.468 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேரளாவில் தேர்தல் நெருங்குவதால் மத்திய அரசுக்கு சாதகமாக இருக்கும் விதமாக இதுபோன்ற நடவடிக்கைகளை அமலாக்கத்துறை எடுப்பதாக முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் விமர்சித்துள்ளார்.
