சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளநிலையில், வரும் 9ம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர் மழை பெய்தது. மழை காரணமாக பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், வங்கக் கடலில் சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (டிச. 4) இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வலுவிழக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வட மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும், 9 வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், சென்னை எண்ணுார், ஹிந்துஸ்தான் பல்கலை ஆகிய இடங்களில் தலா 15 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அடுத்தபடியாக, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, 13 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் தலா, 12 செ.மீ., மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
