சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பலியான நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 300-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிஜப்பூரின் தென்கிழக்கு பகுதி, தன்டேவாடாவில் பாதுகாப்புப் படையினர் நேற்று காலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை மூண்டது.
இந்த சண்டையில் மாவட்ட ரிசர்வ் படையைச் சேர்ந்த 3 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். நக்சலைட்டுகள் 7 பேர் முதலில் பலியாகினர். பின்னர் காயமடைந்த மேலும் 5 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து நக்சலைட்டுகள் 12 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படை தரப்பில் கூறப்பட்டது.
சுட்டுக் கொல்லப்பட்ட 2 நக்சலைட்டுகளில் பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்ட அந்த அமைப்பின் தளபதியும் ஒருவர் எனத் தெரிவித்துள்ள பாதுகாப்புப் படையினர், நக்சலைட்டுகள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
