இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது அந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை மிட்செல் ஸ்டார்க் கைப்பற்றினார். முதல் போட்டியை தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டி தொடங்கியுள்ளது.
போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது அதன் அடிப்படையில் இன்றைய முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் குவித்து இருக்கிறது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 135* ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இன்றைய போட்டியில் அவர் ஒரு பெரிய உலக சாதனை படைத்திருக்கிறார்.

2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது பந்துவீச்சை தொடங்கிய மிட்செல் ஸ்டார்க் தற்பொழுது வரை மொத்தமாக 418 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் மத்தியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக பாகிஸ்தானை சேர்ந்த வாசிம் அக்ரம் முதலிடத்தில் இருந்தார். இன்றைய போட்டியில் வாசிம் அக்ரமை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு ஸ்டார்க் முன்னேறி இருக்கிறார்.
முதல் நாள் ஆட்டம் முடிந்த பின்னர் அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. வாசிம் அக்ரமை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறீர்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காத ஸ்டார்க் “அவர் ஒரு தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர். இப்பொழுதும் அவர்தான் சிறந்தவர்” என்று ஒரே வரியில் முடித்துவிட்டார்.

