ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் தொடரில் இரண்டாவது போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி அதனுடைய முதல் இன்னிங்ஸில் 334 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 136 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணி அதனுடைய முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் குவித்து இருக்கிறது. அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 77 ரன்கள் எடுத்து அசத்தினார்.
முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் ஆறு விக்கெட்டுகள் என்று ஒரு பக்கம் அசத்த மறுபக்கம் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 77 ரன்கள் எடுத்து மிட்செல் ஸ்டார்க் இங்கிலாந்து அணிக்கு தண்ணி காட்டி வருகிறார். ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை கதிகலங்க வைத்து ஆட்டநாயகன் விருது வாங்கினார்.
முதல் போட்டியின் தொடர்ச்சியாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரண்டாவது போட்டியிலும் பந்து வீச்சு பேட்டிங் என இரண்டிலும் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறார்.

பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் மற்றும் ஒரு அரை சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் தட்டிச் சென்றுள்ளார்.

அதேபோல டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்பதாவது இடத்தில் களம் இறங்கி அதிக ரன்கள் அடித்த வீரர் என்கிற பெருமையையும் அவர் தட்டிச் சென்று இருக்கிறார்.

177 ரன்கள் பின் தங்கிய நிலையில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸிலும் மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய நாளை ஒரு சில மணி நேரங்களில் இந்த போட்டி நிறைவு பெறும். முதல் போட்டியை தொடர்ந்து இந்த இரண்டாவது போட்டியிலும் மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகன் என்பதை தட்டிச் செல்லப் போகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
