‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு நிறைவு குறித்து நாடாளுமன்றத்தில் நாளை (டிச. 8) சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ம் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் 14க்கும் மேற்பட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் இரு அவைகளிலும் மசோதா மீதான விவாதங்கள் நடந்து வருகிறது. இருப்பினும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் கூட்டத் தொடரின் பணிகள் பாதிக்கப்பட்டது. இருப்பினும், அமளிக்கு இடையே மணிப்பூர் ஜிஎஸ்டி மசோதா, புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.
இந்தநிலையில், SIR குறித்து டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மக்களவையில் விவாதம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதேபோன்று, நாளை (டிச. 8) ‘வந்தே மாதரம்’ பாடலின், 150வது ஆண்டு நிறைவு குறித்து சிறப்பு விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 10 மணி நேரம் நடைபெற உள்ள இந்த விவாதத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். அப்போது ‘வந்தே மாதரம்’ பாடல் தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பின்னர், மக்களவையில் ‘வந்தே மாதரம்’ பாடல் தொடர்பான சிறப்பு விவாதத்தின் போது, எம்பி.க்கள் தங்களது கருத்துக்களை பேச உள்ளனர்.
