தருமபுரியில் தவெக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த காவலரின் கையை கடித்த தவெக தொண்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தருமபுரியில் பாலக்கோடு மார்க்கெட் அருகில் செயல்பட்டு வந்த சொகுசு மதுபான கூடத்தை (Club) அகற்றக்கோரி தவெக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தவெக மாவட்டச் செயலாளர் தாபா சிவா பேசிக்கொண்டிருந்த போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தவெக தொண்டர்களின் ஒருபகுதியினர், அந்த மதுபான கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தடுப்பை மீறி தாக்குதல் நடத்த முயன்றனர். இதில், போலீசாருக்கும் தவெகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த சமயத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெக தொண்டர் ஒருவர், பாதுகாப்பு பணியில் இருந்த காவலரின் கையை கடித்தார். இதனால் டிஎஸ்பி சுந்தர்ராஜ் தலைமையான போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதில் போலீசாரின் கையை தவெக தொண்டர் கடித்த வீடியோவும், புகைப்பட காட்சியும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில், காவலரின் கையை கடித்த ஜெமினி என்பவரை பாலக்கோடு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஜெயபிரகாஷ், கணேசன், கிருஷ்ணன், வினோத்குமார் என மொத்தம் 5 பேரை பாலக்கோடு போலீசார் கைது செய்துள்ளனர்.
