அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை தரவுள்ள நிலையில் அவருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள ரூ.10 லட்சம் கட்ட வேண்டும் என்று செய்திகள் வெளியாகியுள்ளதால் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
உலக கால்பந்து ‘கோட்’ என்று அழைக்கப்படும் லியோனெல் மெஸ்ஸி நாளை மறுநாள் (டிச.13ம் தேதி) சனிக்கிழமை இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார். 2022 FIFA உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸியின் வருகை இந்திய ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இது 2011-க்குப் பிறகு அவரது இரண்டாவது இந்தியா வருகை ஆகும். இந்த பயணத்தின்போது கொல்கத்தாவின் லேக் டவுன் ஸ்ரீபூமியில் அவரது 70 அடி உயர சிலை திறக்கப்படவுள்ளது.
இந்தநிலையில், இவரது இந்திய பயணத்தை டூர் ஏற்பாட்டாளர்கள் பிசினஸாக மாற்றிவிட்டனர் என்று கூறப்படுகிறது. அதாவது, வரும் 13ம் தேதி ஐதராபாத் செல்லவுள்ள மெஸ்ஸியுடன் 100 பேருக்கு மட்டுமே போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு போட்டோ எடுக்க ரூ.9.95 லட்சம் கட்ட வேண்டுமாம். இதுகுறித்த செய்தி வெளியாகியுள்ள நிலையில், கடுமையான விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
தி கோட் டூர் (ஹைதராபாத்) ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசகர் பார்வதி ரெட்டி, ஸ்டேடியம் நிகழ்வுக்கான அனைத்து டிக்கெட் பிரிவுகளும் மாவட்ட செயலியில் கிடைக்கும் என்று கூறினார். எந்த கிரிக்கெட் வீரர்களும் அழைக்கப்படவில்லை என்றும், மூன்று மணி நேர நிகழ்ச்சியில் ஒரு இசை நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
