மகாகவி பாரதியாரின் 144வது பிறந்த நாளை (டிசம்பர் 11) முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடியும் தமிழில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி என்ற இயற்பெயர் கொண்ட பாரதியார், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் டிசம்பர் 11, 1882 ஆம் ஆண்டு பிறந்தார். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி காலமானார். இந்த நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்தவகையில் பிரதமர் மோடியும் தனது எக்ஸ் தளத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், பாரதியாரின் கவிதைகள் துணிவை தூண்டியதாக குறிப்பிட்டுள்ளார். அவரது சிந்தனைகள் மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலை கொண்டிருந்ததாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை பாரதி ஒளிர செய்ததாகவும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க பாடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
