4வது ஆண்டை நெருங்கி வரும் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் மேலும் தொடர்ந்தால் அது ஒரு 3ம் உலகப் போராக மாறக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா-உக்ரைன் இடையே தீவிர போர் தொடங்கியது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளை கடந்து 4வது ஆண்டும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர, திருத்தப்பட்ட 19 அம்சங்கள் அடங்கிய அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்தார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், அமைதி ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் சில பகுதிகள் தங்களுக்கு எதிராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்து வருகிறார்.
பேச்சுவார்த்தைக்கு தடங்கள் ஏற்படுத்துவதாக ஜெலன்ஸ்கி மீது விரக்தியில் உள்ள டிரம்ப், தற்போது பெரிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இந்த போரின் தற்போதைய போக்கு, உலகை ஒரு பேரழிவு தரும் உலகளாவிய மோதலை நோக்கித் தள்ளிவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த மாதம் மட்டும் சுமார் 25000 பேர் இந்த போரில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்ட டிரம்ப், “இதுபோன்ற விஷயங்கள் மூன்றாம் உலகப் போர்களில் முடிவடையக்கூடும் என்றும், இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறை தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட பிறகு வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், இந்த போரை நிறுத்த “மிகவும் கடினமாக உழைத்து வருவதாக” கூறினார், மேலும் அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து ஆழ்ந்த விரக்தியை வெளிப்படுத்திய டிரம்ப், கொலை நிறுத்தப்படுவதை நான் காண விரும்புகிறேன் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், அதிபர் டிரம்ப் “இந்தப் போரின் இரு தரப்பினராலும் மிகவும் விரக்தியடைந்துள்ளார் என்றும் சந்திப்புகளை நடத்துவதில் வெறுப்படைந்துள்ளார் என்றும் தெரிவித்தார். ஒரு நாளில்” போரை தீர்த்துவிட முடியும் என்று ஒரு காலத்தில் கூறிய டிரம்ப், தனது பொறுமையின்மை குறித்து பெருகிய முறையில் குரல் கொடுத்து வருகிறார். “அவர் இனிமேல் எந்தப் பேச்சையும் விரும்பவில்லை. அவர் நடவடிக்கையை விரும்புகிறார். இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்,” என்று லீவிட் கூறினார்.
