2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (டிச. 12) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பல்வேறு முக்கிய திட்டப் பணிகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதில், வரும் 2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தப் பணிகளுக்காக ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ், நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு உலகிலேயே மிகப்பெரிய நிர்வாக நடவடிக்கை என்றார். இந்த பணிகளுக்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2011-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
